விழுப்புரம்,அக்.15: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து வாக்கூர், மேல்காரணையில் பா.ம.க. சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட வன்னியர் சங்க துணைத்தலைவர் அன்புமணி தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் சம்பத் வரவேற்றார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த தேர்தல் நமது மண்ணில் நடைபெறுகிறது. இது நமக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் போட்டியாக கருதுகிறேன்.

இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று மு.க.ஸ்டாலின் முகத்தில் கரியை பூச வேண்டும். அவர் வாயை திறந்தாலே பொய் தான். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏராளமான பொய்யை சொல்லி இருக்கிறார் என்றார். இதில் அ.தி.மு.க. அமைச்சர்கள் சி.வி.சண்முகம், செங்கோட்டையன், அ.தி.மு.க. வர்த்தக அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், பா.ம.க. துணை பொதுச்செயலாளர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.