வெளியூர் செல்ல இதுவரை 51,500 பேர் முன்பதிவு

சென்னை

சென்னை, அக்.15: தீபாவளிக்கு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சிறப்பு ரெயில் பற்றிய அறிவிப்பு வெளியாவதில் தாமதல் ஏற்படுவதை தொடர்ந்து பேருந்துகளின் முன்பதிவு அதிகரித்து வருகிறது. இன்று வரை 51,500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மொத்தம் 10,940 பேருந்துக்கள் வெளியூர்களுக்கு இயக்கப்படும்.

இந்த பேருந்துகளுக்கு அரசு பேருந்து கழக இணையத்தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்‘ என கூறியுள்ளார். இதனிடையே தீபாவளியையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவது பற்றி அறிவிப்பை வெளியிடுவது தெற்கு ரெயில்வே தாமதம் செய்து வருகிறது. பாண்டியன், நெல்லை, முத்துநகர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 மாதத்திற்கு முன்பே தீபாவளிக்கான முன்பதிவு முடிவடைந்துவிட்டது.

சிறப்பு ரெயில்கள் பற்றி அறிவிப்பு இன்னும் வெளியிடாததால் கடந்த 3 நாட்களாக பேருந்துகளில் முன்பதிவு செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை வரை 51,500க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருப்பதாக போக்குவரத்து துறை தகவல் கூறுகிறது. இதன்மூலம் ரூ.2.5 கோடி வசூலாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் 7-ல் தீபாவளி கொண்டாடப்பட்டது. அப்போது 1 மாதத்திற்கு முன்பே அக்டோபர் நாளில் சிறப்பு ரெயில்கள் பற்றி அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டு அக்டோபர் 27-ல் தீபாவளி வந்தபோதிலும் இன்னும் சிறப்பு ரெயில்கள் பற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.