செங்குன்றம், அக்.15: பக்கத்துவீட்டு பெண்ணின் தவறான தொடர்பை கண்டித்ததால், பெண் உட்பட 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர். செங்குன்றம் அருகே உள்ள அத்திவாக்கம் கோமதியம்மன் நகரில் மூர்த்தி என்பவருக்கு சொந்தமான 2 வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் மெக்கானிக் ராஜீ (வயது 30). இவரது மனைவி சித்ரா (வயது 26). இவர்களது மகன் மோனீஷ் (வயது 4), சித்ராவின் தம்பி கார்த்திக் (வயது 24) ஆகியோர் வசித்துவருகின்றனர்.

மற்றொரு வீட்டில் பவித்ரா (வயது 30) என்பவர் மட்டும் தனியாக வசித்துவருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் மட்டும் இங்கு தனியாக வசித்துவருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த வினோத் என்பவருக்கும், பவித்ராவுக்கும் இடையே தவறான பழக்கம் இருந்ததாக தெரிகிறது.

அடிக்கடி பவித்ராவின் வீட்டிற்கு வந்துசெல்லும் வினோத்தை, பக்கத்து வீட்டு பெண்ணான சித்ரா கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த வினோத், நேற்றிரவு அரிவாளுடன் சித்ரா வீட்டிற்கு வந்து, சித்ரா, அவரது குழந்தை மோனீஷ், மற்றும் சித்ராவின் தம்பி கார்த்திக் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதுகுறித்து, செங்குன்றம் காவல் நிலையத்தில் சித்ராவின் கணவர் ராஜீ அளித்த புகாரின்பேரில், தப்பியோடிய வினோத்தை போலீசார் தேடிவருகின்றர். படுகாயமடைந்த மூன்று பேருக்கும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.