புதுடெல்லி, அக்.16: ஐஎன்எக்ஸ் மீடியா ஒப்பந்தத்தில் நிதி மோசடி நடந்தது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை இன்று கைது செய்தது. திஹார் சிறையில் 2 மணி விசாரணைக்கு பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்தது தொடர்பான விவகாரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ஆகஸ்ட் 21-ம் தேதி சிபிஐ கைது செய்தது.

விசாரணைக்குப் பிறகு செப்டம்பர் 5-ம் தேதி முதல் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 55 நாள் சிறைவாசத்துக்கு பிறகு அவரது நீதிமன்ற காவல் முடிவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.

இந்த நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவன ஒப்பந்தத்தில் நிதி மோசடி நடந்தது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த விஷயத்தில் ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்த அனுமதி கோரி டெல்லி தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்ப்ட்டது. நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் நேற்று விசாரணை முடிவடைந்தது.

அப்போது ப.சிதம்பரத்திடம் விசாரணை நடத்தவும் தேவைப்பட்டால் கைது செய்யவும் அமலாக்கத்துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.

நீதிமன்ற வளாகத்திலேயே உடனே விசாரணை நடத்த அனுமதி கேட்டதற்கு நீதிபதி மறுத்து விட்டார். இதையடுத்து இன்று காலை திஹார் சிறையில் அமலாக்கத்துறையைச் சேர்ந்த 3 அதிகாரிகளைக் கொண்ட குழு ப.சிதம்பரத்திடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தியது.

விசாரணை முடிவடைந்த உடன் ப.சிதம்பரம் அமலாக்கத்துறையால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.

இப்போது சிறை வளாகத்தில் சிதம்பரத்தின் மகன் கார்த்தி, மனைவி நளினி ஆகியோரும் இருந்தனர். கார்த்தி சிதம்பரம் கூறுகையில், என் தந்தையை பார்ப்பதற்காக நான் வந்தேன். அவர் நல்ல உணர்வுடன் இருக்கிறார். இந்த போலி விசாரணை ஒரு அரசியல் நாடகம் என்றார்.

இதனிடையே சிபிஐ கைது செய்த வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ப.சிதம்பரம் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபல் வாதாடுகையில் டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் சில முக்கிய பகுதிகளை படித்துக் காட்டினார். சாட்சியங்களை ப.சிதம்பரம் கலைக்கக் கூடியவரோ, வெளிநாட்டுக்கு தப்பிசெல்பவரோ அல்ல. அனுமானத்தின் அடிப்படையில் அவருக்கு ஐகோர்ட்டில் ஜாமீன் மறுக்கப்பட்டிருக்கிறது என்றார்.

இதனிடையே திஹார் சிறையில் இருக்கும் சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு சிபிஐக்கு நாளை காலை தனி நீதிபதி உத்தரவிட்டார். பிற்பகல் 3 மணிக்கு ப.சிதம்பரம் மீண்டும் தனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளார்.