சென்னை, அக்.16: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைகழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் அவருக்கு வழங்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு (டாக்டர் ஆப் லட்டர்ஸ் டிலிட்) கவுரவ டாக்டர் பட்டத்தை பல்கலை கழகங்கள் வழங்குகின்றன. முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு 2 முறையும், ஜெயலலிதாவிற்கு 5 முறையும், கருணாநிதிக்கு 2 முறையும் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகர்நிலை பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்குகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பாதுகாப்பு ஆராய்ச்சி துறையும் செயலாளரும் மற்றும் டிஆர்டிஓவின் தலைவருமான ஜி.சதீஸ் ரெட்டி, கங்கா மருத்துவமனையின் தலைவர் எஸ்.ராஜா சபாபதி ஆகியோருக்கு கவுரவ டி.எஸ்சி பட்டமும், இசையமைப்பாளர் ஹரிஸ்ஜெயராஜ், நாட்டிய கலைஞர் சோபனா சந்திரகுமார் ஆகியோருக்கு கவுரவ டி.லிட் விருதும் வழங்கப்படுகிறது. 20-ம் தேதி நடைபெறும் 28-வது பட்டமளிப்பு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படுவதாக உள்ளன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றி வரும் மக்கள் நலப்பணி மற்றும் அவரது ஆளுமை திறன், நிர்வாகத்திறன் ஆகியவற்றை பாராட்டி இந்த பட்டத்தை எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்க முன்வந்துள்ளது.