சென்னை, அக்.16: காஸ்மட்டிக் (அழகு சாதனப் பொருட்கள் விற்பனை) வியாபாரியிடம் ரூ.80 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை வேப்பேரியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 33). இவர் அதே பகுதியில் காஸ்மெட்டிக் பொருட்கள் (அழகு சாதனங்கள்) மற்றும் பேன்சி பொருட்களை மொத்தமாக வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜாகீர் அகமத் தமான் என்பவர் தினேஷை தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்தவரிடம், 100 ரூபாய் நோட்டு கட்டுகளாக ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது. அதனை 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளாக மாற்றி கொடுத்தால், அதில் 2% கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதனை நம்பி தினேசும் நீலாங்கரைக்கு ரூ.80 லட்சம் பணத்துடன் வந்து ஜாகீரை ஒரு வீட்டில் சந்தித்துள்ளார். அவருடன் 4 பேர் இருந்துள்ளனர். பணத்தை எண்ணிப் பார்ப்பதாக கூறிவிட்டு, தினேஷை வீட்டிற்கு வெளியே காத்திருக்க சொல்லிவிட்டு, வீட்டின் பின்புற கதவு வழியாக ரூ.80 லட்சம் பணத்துடன் அவர்கள் தப்பியோடியுள்ளனர்.
நீண்ட நேரம் திரும்பி வராததால் சந்தேகமடைந்த தினேஷ் போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.