திருச்சி,அக். 17: வங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையில் திருச்சி சுரேசிடம் 3-வது நாளாக போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது கிளு கிளுப்பான பரபரப்பு தகவலை சுரேஷ் தெரிவித்துள்ளார். எனது மாமா (முருகன்) என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க திட்டமிட்டார். அதன்படி, 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது.

மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. தொடர்ந்து பைனான்ஸ் பிரச்சினை எழுந்ததால், மீண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்று கூறி முருகன் வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். போலீஸ் காவலில் உள்ள சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப் படையில், படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்புக்கொள்ளாவிட்டாலும், முருகன் கொடுத்த நகைகளை பரிசாக பெற்ற அந்த பிரபல நடிகையிடம் தனிப்படை போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர் ஒருவரின் வாரிசு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சுரேஷ் கும்பலுடன் உல்லாசமாக தொடர்பில் இருந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள் குறித்தும் விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதனால், இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளையன் முருகன், சுரேஷ் உள்ளிட்டவர்களுடன் தொடர்பில் உள்ள நடிகைகள் கிலியில் உள்ளனர். நடிகைகளிடம் விசாரித்தால்தான் கொள்ளையன் சுரேஷ் சொன்னது உண்மையா? என தெரியவரும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பெங்களூரு போலீசார் காவலில் இருக்கும் முருகனின் காவலை மேலும் 4 நாட்களுக்கு பெங்களூரு கோர்ட்டு நேற்று நீடித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், முருகனை திருச்சி போலீசார் காவலில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.