விழுப்புரம், அக்.17: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் நலனில் அக்கறையில்லை. ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இருக்கும் அவர் அரசியலில் ஜீரோ ஆகிவிடுவார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முத்தமிழ்செல்வனை ஆதரித்து நேற்று தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழகத்தில் இன்று ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக அ.தி.மு.க. உள்ளது. அதனால் மு.க.ஸ்டாலின் பயப்படுகிறார். எனவே திட்டமிட்டு கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை பற்றி விமர்சித்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர். ஆகையால் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, வேட்பாளர் முத்தமிழ் செல்வனை அமோக வெற்றி பெற செய்யுங்கள்.

மு.க.ஸ்டாலின் போட்ட இந்த நாடகத்தில் ஏமார்ந்தது ஏழை மக்கள் தான். இதனால் அவருக்கு என்ன நஷ்டம். ஒரு தலைவர் நிச்சயம் செய்வார் என்று மக்கள் அவரை நம்பினார்கள். ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர் தான் மு.க.ஸ்டாலின். அவருக்கு தகுந்த பதிலடி கொடுங்கள். அ.தி.மு.க.வில் எந்த திட்டமும் நிறைவேற்ற வில்லை என்று அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்.

இவ்வாறு வாக்காளர் பெருமக்களுக்கு துரோகம் செய்த மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுங்கள். கருணாநிதி மறைவுக்கு பின்னர் தானே உங்களால் கட்சி தலைவர் ஆக முடிந்தது. ஆதலால் விபத்தில் தான் நீங்கள் வந்தீர்கள். ஆனால் ஜெயலலிதா தான் இருக்கும் காலத்திலேயே சாதாரண தொண்டன் கூட முதலமைச்சர் ஆக முடியும் என்கிற நிலையை உருவாக்கி பார்த்தார். உங்களது எண்ணம் சுத்தம் இல்லை, அதனால் தான் உங்களால் முதலமைச்சர் ஆக முடியவில்லை. எந்த காலத்துக்கும் மக்களை ஏமாற்றி வந்தால் எப்படி உங்களை ஆதரிப்பார்கள்.

தி.மு.க.காரர்களால் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்கள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். மக்கள் நலனை பற்றி மு.க.ஸ்டாலினுக்கு எண்ணம் இல்லை. அவருக்கு எங்களது ஆட்சியை கவிழ்க்க வேண்டும், அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்பது தான் எண்ணம். இவ்வாறு கெட்ட எண்ணத்தோடு இருக்கும் மு.க.ஸ்டாலின் அரசியலில் ஜீரோவாக தான் போவார். இவ்வாறு அவர் பேசினார்.