புனே, அக்.18:  இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆன விரக்தியில் தனக்கு தானே கோபத்தில் காயம் ஏற்படுத்திக்கொண்ட தென்னாப்பிரிக்காவின் தொடக்க பேட்ஸ்மேன் ஏய்டன் மார்க்ரம், காயம் காரணமாக 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய கையோடு நாடு திரும்பிவிட்டார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, ராஞ்சியில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாளை களம்காண்கிறது. இந்த தொடரில், தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்கார் மார்க்ரம் சரியாக ஆடவில்லை. முதல் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலுமே ரன் ஏதும் எடுக்காமல் டக்-அவுட் ஆனார். புனேயில் நடந்த இப்போட்டியில் எல்பிடள்யூ முறையில் ஆட்டமிழந்ததும் எதிர்முனையில் இருந்த சக வீரர் டீன் எல்கரிடம் விவாதித்துவிட்டு அப்பீல் கேட்காமல் வெளியே சென்றார். ஆனால், டிவி ரீப்ளேவில் அவர் ஆட்டமிழக்கவில்லை என்று தெரிந்தது.

இதனால், அதிருப்தியடைந்த மார்க்ரம், டிரெஸ்சிங் ரூம் சென்றதும் ஆத்திரம் தாளாமல் அங்கிருந்த திடமான பொருள் ஒன்றின் மீது கையால் ஓங்கி அடித்துள்ளார். இதில் அவரது மணிகட்டில் காயம் ஏற்பட்டதுடன், லேசான எலும்பு முறிவும் ஏற்பட்டது தெரியவந்தது. இதன்காரணமாக, அவர், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியதுடன், தென்னாப்பிரிக்காவுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் இன்னும் நியமிக்கப்படவில்லை. சமீபத்தில், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், ஆத்திரத்தில் டிரெஸ்சிங் ரூம் சுவரில் கையால் குத்தி இதேபாணியில் தனக்கு தானே காயம் ஏற்படுத்திக்கொண்டது, குறிப்பிடத்தக்கது.