திருத்தணி, அக்.18: திருத்தணி அருகே இன்று காலை பைக்கில் டியூஷன்சென்ற மாணவர்கள் மீது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். பின்னால் அமர்ந்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருத்தணி அடுத்து முஸ்லீம் நகர் பகுதியைச்சேர்ந்தவர் அசாரூதின் (வயது15), திருத்தணி தெக்களூரை சேர்ந்தவர் தினேஷ் (வயது15 ) இருவரும் திருத்தணி அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 வகுப்பு படித்து வந்தனர். இருவரும் ஒரே இடத்தில் டியூஷன்படித்து வந்தனர்.

இன்று காலை வழக்கம்போல் இருவரும் ஒரே பைக்கில் டியூஷன் சென்றனர். பின்னர் வீடு திரும்பிவந்தனர்.அப்போது தினேஷ் பைக்கை ஓட்ட அசாரூதின் பின்னால் அமர்ந்திருந்தார். இவர்கள் சென்ற பைக் கடப்பா டிரங்ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது
அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வாகனம் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இந்த விபத்தில் பின்னால் அமர்ந்திருந்த அசாரூதின் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.தினேஷ் மயிரிழையில் உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலியான அசாரூதின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பள்ளி வேன் டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் பெற்றோரிடம் டியூஷன் சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறி சென்ற மகன் பிணமாக திரும்பியதை பார்த்த அசாரூதின் பெற்றோர் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.