ப.சிதம்பரம், கார்த்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்தியா

புதுடெல்லி, அக்.18: ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி மீது தனி நீதி மன்றத்தில் சிபிஐ இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அனுமதித்த தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து சிறையில் அடைத்தது. இதே வழக்கில் பணப்பரி மாற்றத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறையும் சிதம் பரத்தை கைது செய்திருக்கிறது. சிபிஐ கைது செய்த வழக்கில் சிதம்பரத்தின் காவல் நேற்றுடன் முடிவடைவதாக இருந்ததால் அவரை சிபிஐ தனி நீதிபதி அஜய்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து சிபிஐ கோரிக்கைப்படி அவருக்கு வரும் 24-ந் தேதி வரை காவலை நீடிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதேபோல் அமலாக்கத்துறையின் கோரிக்கையின் பேரில் அவரை 7 நாள் காவலில் எடுத்து பணப்பரிமாற்றத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரிக்கவும் தனி நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார் இதனிடையே ஆகஸ்டு 21-ந் தேதியே சிதம்பரம் கைது செய்யப்பட்டு விட்டதால் குற்றவியல் நடைமுறைப்படி 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படா விட்டால் ஜாமீனில் விடுதலையாக வாய்ப்பு உள்ளது. எனவே அடுத்த வாரத்தில் சிதம்பரம் மற்றும் இதே வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்துள்ள அவரது மகன் கார்த்தி ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிஐ முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று தனி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நிதி ஆயோக் முன்னாள் செயல் அதிகாரி சிந்து ஸ்ரீ குள்ளார் மற்றும் 2004 முதல் 2008 வரை பொருளாதார விவகாரத்துறையில் கூடுதல் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த அதிகாரிகள் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்று இருப்பதாக தெரிகிறது. இதனிடையே ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்களாக இருந்த பீட்டர், இந்திராணி பீட்டர் ஆகியோரின் சாட்சியங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெறும் என தெரிகிறது.