சென்னை, அக்.19: விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுவை காமராஜர்நகர் தொகுதிகளில் நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. 21-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. 24-ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 23-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர்.

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, தமிழ்பேரரசு கட்சி சார்பில் இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட 12 பேர் போட்டியிடுகிறார்கள். இதே போல புதுச்சேரி மாநிலம் காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஜான்குமார், என்ஆர் காங்கிரஸ் சார்பில் புவனா ஆகியோர் போட்டியிடுகின்றனர். போட்டியிடுகிறார்கள். வேட்புமனுத் தாக்கல் முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது. அன்றில் இருந்தே வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கினர்.

அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்தனர். மேலும் 15 அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொகுதிகளில் முகாமிட்டு ஓட்டுவேட்டை நடத்தினர். கூட்டணி கட்சி தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, பிரேமலதா, ஜி.கே. வாசன், சரத்குமார், நடிகர் கார்த்திக் ஆகியோரும் பிரசாரம் செய்தனர். திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன், தா. பாண்டியன், நல்லகண்ணு, காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா ஆகியோர் பிரசாரம் செய்தனர். எம்.பி.க்களும் முகாமிட்டு தேர்தல் பணிகளை கவனித்து வந்தனர்.

இந்நிலையில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டியில் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. இறுதி நாளான இன்று வேட்பாளர்கள் ஒவ்வொரு பகுதியிலும் வீடு வீடாக சென்று தீவிர பிரசாரம் செய்தனர்.பிரச்சாரம் முடிவடைந்ததைத் தொடர்ந்து திருமண மண்டபங்கள், சமுதாய நலக் கூடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வெளியூர்களை சேர்ந்தவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு அன்று மதுக்கடைகள் மூடப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் போதும் மதுக்கடைகள் மூடப்படுகின்றன. இரு தொகுதிகளிலும் நாளை மறுதினம் 21-ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 24-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.