சென்னை, அக்.19: கல்கி பகவான் ஆசிரமங்களில் இன்று நான்காவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். ரூ.500 கோடிக்கு வரிஏய்ப்பு செய்தது பற்றியும், ரூ.93 கோடி ரொக்கம் கைப்பற்றப்பட்டது பற்றியும் ஆசிரம நிர்வாகி கிருஷ்ணா மற்றம் மேலாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆந்திரா, கர்நாடகம் என இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவரது ஆசிரம கிளைகள் உதயமாயின. பக்தர்களும் பெருகினார்கள். சென்னையில் மட்டுமே 20 கிளைகள் திறக்கப்பட்டன.

இங்கு வருமான வரி அதிகாரிகள் குழு கடந்த 16-ந் தேதி தொடங்கி ஒரே நேரத்தில் சென்னை, ஐதராபாத், பெங்களூரு, வரதய்யா பாளையம் ஆகிய பகுதிகளில் கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமங்கள் உள்பட 40 இடங்களில் அதிரடி சோதனைகள் நடத்தினார்கள். இங்கு கைப்பற்றபட்டவைக் குறித்து வருமான வரித்துறை நேற்று அறிவிப்பு வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
* 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.43 கோடியே 90 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
* வெளிநாட்டு பணம் என்ற வகையில், 2லு மில்லியன் அமெரிக்க டாலர் சிக்கியது. இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.18 கோடி ஆகும்.
* 88 கிலோ தங்க கட்டிகள், நகைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு ரூ.26 கோடி.
* 1,271 காரட் வைரக்கற்கள் சிக்கின. இவற்றின் மதிப்பு ரூ.5 கோடி.
* கைப்பற்றப்பட்ட ரொக்கம், அமெரிக்க டாலர், தங்கம், வைரம் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.93 கோடி ஆகும்.
* கணக்கில் காட்டாத வருமானம் ரூ.500 கோடிக்கு அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* கல்கி பகவான் குழுமம், இந்தியாவில் மட்டுமல்லாது சீனா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள கம்பெனிகளில் பெரிய அளவுக்கு முதலீடுகள் செய்துள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இன்று நான்காவது நாளாக சோதனை நீடித்து வருகிறது. ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி கிருஷ்ணா அவரது மனைவி மற்றும் மேலாளர்கள் தலைமை அதிகாரி லேகேஷ் தாதாஜி ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாவின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தெரிவிகிறது. இது தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.