சென்னை, அக்.19: ஆன்மிக பயணமாக கடந்த 13-ம் தேதி இமயமலை புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் தனது பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு சென்னை திரும்பினார். ஏர்போர்ட்டில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் ஹெல்மட் அணியாமல் சென்ற வாலிபருக்கு அட்வைஸ் கூறியதுடன் அவரை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ரஜினியின் 168-வது படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், கடந்த 13-ம் தேதி சென்னையில் இருந்து உத்தரகாண்ட் சென்ற ரஜினிகாந்த் ரிஷிகேசில் உள்ள ஆசிரமம், பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய இடங்களுக்கு சென்று அங்குள்ள கோவில்களில் வழிபட்டார். இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கும் சென்று தியானத்தில் ஈடுபட்டார். தனது ஆன்மிக பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரரவு ரஜினி சென்னை திரும்பினார்.

ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இமய மலை பயணம் நன்றாக அமைந்தது என்றும், மனதிற்கு மிகவும் அமைதியை தந்தது என்றும் கூறினார். அதன் பின்னர் ஏர்போர்ட்டில் இருந்து போயஸ் கார்டன் இல்லத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அவரை பைக்கில் பின்தொடர்ந்து வாலிபர் வந்தார். தனது வீட்டுக்கு வந்து காத்திருந்த அந்த ரசிகரை உள்ளே அழைத்து, வண்டி ஓட்டும் போது ஹெல்மட் அணியும் படி அட்வைஸ் சொன்னதுடன் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.