சென்னை, அக்.19: மத்தியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அதை தடுக்க அதிமுக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதை மறைத்து அதிமுக மீது வீண்பழி சுமத்தப்படுகிறது என்று நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். நான்குனேரி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வெ.நாராயணனுக்கு ஆதரவாக முன்னீர்பள்ளம், கிருஷ்ணாபுரம், கே.டி.சி. நகர் சீவலப்பேரி பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள், இப்போது அவருடைய மரணம் குறித்து கேள்வியெழுப்பி நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலின் விஷமத்தனமான பொய் பிரசாரத்தை செய்கிறார். ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர்களை அவருடைய ஆன்மா மன்னிக்காது. ஜெயலலிதா மரணம் பற்றி பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியை 2 ஆண்டுகளாக வீட்டில் சிறை வைத்த ஸ்டாலின், அவரைப் பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நீட் தேர்வு விவகாரத்தில் தவறான தகவல்களைக் கூறுகிறார்கள். நீட் தேர்வைக் கொண்டுவந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிக்காலத்தில்தான். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதும், உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததும் அதிமுக அரசு. ஆனால், நீட் தேர்வுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடியது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். ஆனால், இப்போது மக்களைக் குழப்பி தேர்தல் ஆதாயம் அடைய அதிமுக மீது வீண் பழி சுமத்த நினைக்கிறார்கள்.

தேர்தல் முடிந்ததும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். 5 லட்சம் முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும். திமுகவில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே பதவி கிடைக்கும். திமுக கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம். இவ்வாறு அவர் பேசினார்.