திருக்குறள் பேச்சு போட்டி: சென்னை மாணவி சாதனை

சென்னை

சென்னை அக்.21: ஸ்ரீராம் இலக்கிய கழகம் நடத்திய திருக்குறள் பேச்சு போட்டியில் முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவி ப.தமீனா தஸ்பிஹா பரிசு வென்று சாதனை படைத்தார். இந்தியா சீட்டு நிதி வர்த்தகத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமாகிய ஸ்ரீராம் இலக்கியக் கழகம், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக நடத்திய திருக்குறள் பேச்சுப் போட்டியில், சென்னை, முகப்பேரில் இயங்கி வரும் வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ப.தமீனா தஸ்பிஹா இடைநிலைப் பிரிவில் மூன்றாம் பரிசை வென்று சாதனை படைத்துள்ளார்.

ஸ்ரீராம் இலக்கியக் கழகம், இடைநிலை மேல்நிலை, கல்லூரி என மூன்று பிரிவுகளில் திருக்குறள் பேச்சுப் போட்டியை மாநில அளவில் நடத்தியது. இதில் இடைநிலைப் பிரிவில் ( 6-8 ஆம் வகுப்பு) 858 மாணவர்கள், மேல்நிலைப் பிரிவில் (9-12 ஆம் வகுப்பு) 667 மாணவர்கள் மற்றும் கல்லூரிப் பிரிவில் 170 மாணவர்கள் என மொத்தம் 1695 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை, புதுச்சேரி, மதுரை, நெல்லை, திருவாரூர், திருச்சி, கோவை, ஈரோடு, சேலம், மற்றும் வேலூர் ஆகிய 10 மண்டலங்களில் கால் இறுதி மற்றும் அரை இறுதிச் சுற்றுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன.

இவற்றிற்கான இறுதிச் சுற்று அண்மையில் சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. அரை இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற 30 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்றனர். முதல் பரிசு வென்றோருக்கு ரூ.10,000 ரொக்கமும், இரண்டாம் பரிசை தட்டிச் சென்றோருக்கு ரூ.7,500 ரொக்கமும், மூன்றாம் பரிசு பெற்றோருக்கு ரூ.5000 ரொக்கமும், நான்காம் பரிசு பெற்றோருக்கு ரூ.2,500 ரொக்கமும், மற்றும் அனைவருக்கும் கோப்பையும், சான்றிதழும் வழங்கப்பட்டன.