கொச்சி, அக்.21:  ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில், கொல்கத்தாவை வீழ்த்திய கேரளா அணி நடப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் நேற்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி., சென்னையின் எப்.சி, அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ், எப்.சி.கோவா, நார்த் ஈஸ்ட் யுனைடெட் (கவுகாத்தி), ஜாம்ஷெட்பூர், ஒடிசா எப்.சி. மும்பை சிட்டி, ஐதராபாத் எப்.சி. ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில், கொச்சி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்த தொடக்க விழாவில் கண்கவர்கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதனைத் தொடர்ந்து நடந்த முதல் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில், கேரள அணி 2-1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை வீழ்த்தி, வெற்றியுடன் நடப்பு சீசனை தொடங்கியுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் பெங்களூரு-நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் சந்திக்கின்றன.