சென்னை, அக்.23: விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளில் நாளை காலை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த இரு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது.

நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதேபோல் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் இஎஸ் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் இடத்தில் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளன. ஒரு சுற்றுக்கு 14 மேஜைகளிலும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நாளை பகல் 12 மணிக்குள் முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தி உள்ளது. இதில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அப்படி இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றால், விக்கிரவாண்டி தொகுதியை திமுகவிடம் இருந்தும், நாங்குநேரி தொகுதியை காங்கிரஸ் கட்சியிடம் இருந்தும் அதிமுக கைப்பற்றும் நிலை உருவாகும்.

புதுச்சேரி மாநிலத்தில் காமராஜர் நகர் தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளருக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக தனியார் தொலைக்காட்சி கருத்துகணிப்பு முடிவுகள் தெரிவிக்கிறது. ஏற்கனவே காங்கிரசிடம் இருந்த அந்த தொகுதியை அக்கட்சி தக்கவைத்துக் கொள்ளும் என்று தெரிவிக்கிறது.