சென்னை, அக்.23: கல்கி பகவான் ஆசிரமங்களில் நடந்த சோதனையில் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து வருமானவரித்துறையினர் அவரை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கல்கி பகவானுக்கு சொந்தமான ஆசிரமங்கள் மற்றும் அலுவலகங்களில் 5 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகளும் அமெரிக்க டாலர்களும், தங்க வைர நகைகளும் சிக்கின. மேலும் வெளிநாடுகளில் முதலீடுகள் செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டன. ரூ.800 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பு பணம், வெளிநாட்டு பண பரிவர்த்தனை ஆகியவை தொடர்பாக கல்கி பகவானின் மகன் கிருஷ்ணாவை விசாரணைக்கு வருமாறு வருமானவரித்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தார்கள்.

கல்கி பகவான் மற்றும் அவரது மனைவி ஆகியோரை காணவில்லை என்று முதலில் கூறப்பட்டது. நாங்கள் எங்கும் ஓடி ஒளியவில்லை. நேமம் ஆசிரமத்தில் தான் இருக்கிறோம் என்று கல்கி பகவான் வீடியோ ஒன்றில் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து விசாரணைக்கு வருமாறு கல்கி பகவானுக்கு சம்மன் அனுப்பப்படும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.