கர்நாடகாவில் இருந்து வினாடிக்கு 40,000 கன அடி நீர் திறப்பு: 12 மாவட்டங்களில் வெள்ள அபாயம்

TOP-4 தமிழ்நாடு முக்கிய செய்தி

சேலம், அக்.23: மேட்டூர் அணை கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக நிரம்பியதால் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. கர்நாடக அணைகள் நிரம்பி விட்டதால் உபரிநீர் வினாடிக்கு 40,000 கன அடி வந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை நீடித்து வருவதால் பாசன பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் 117.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 118.60 அடியாக உயர்ந்தது. இரவு 8 மணிக்கு அணையின் நீர்மட்டம் 119.33 அடியை எட்டியது.

அணையின் மொத்த கொள்ளளவு 93.45 டி.எம்.சி. ஆகும். (ஒரு டி.எம்.சி. என்பது நூறு கோடி கனஅடி). நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 91.25 டி.எம்.சி. ஆக இருந்தது.

அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் நீர்வரத்தும் அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் 2 மாதங்களில் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பி உள்ளது.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,239 கனஅடியில் இருந்து 25,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து வினாடிக்கு 22,500 கனஅடி உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், காவிரி கரையோரம் உள்ள சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்கும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதனிடையே கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டி விட்டன. கேஆர்எஸ் அணையிலிருந்து 24,160 கன அடி தண்ணீரும், கபினி அணையிலிருந்து 5,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் நீர் வரத்து 15,000 கன அடியிலிருந்து 30,000 கன அடியாக அதிகரித்தது. அடுத்த இரு தினங்களில் மேட்டூர் அணைக்கு இன்னும் கூடுதல் தண்ணீர் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.