சென்னை, ஏப்.11: ஆர்.கே.நகர் தேர்தலில் நடந்தது போல , மத்திய சென்னையிலும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் டெபாசிட் இழப்பார் என்று அங்கு களத்தில் உற்சாகமாக பணியாற்றும் அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் கூறுகின்றனர்.

மத்திய சென்னையில் தி.மு.க. வேட்பாளராக தயாநிதிமாறன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பா.ம.க. வேட்பாளர் சாம்பால், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்ய வேட்பாளர் கமீலா நாசர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் ஏற்கனவே வெற்றி பெற்ற தயாநிதி மாறன் எதையும் செய்யவில்லை என்ற ஆதங்கம் மக்களிடம் உள்ளது.

இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு திமுக தலைமை அனுமதி அளித்துள்ளது, அந்த பகுதியில் உள்ள திமுகவினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் கட்சி தொண்டர்கள் பெரிய அளவில் தயாநிதி மாறனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை என்று தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குடும்ப உறுப்பினருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்ற வேதனையில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள், தொகுதி பக்கமே வராத ஒரு வேட்பாளருக்காக எதற்கு களப்பணியாற்ற வேண்டும் என்று புலம்பி வருகின்றனர்.

இதனால் அவரை எதிர்த்து போட்டியிடும் சாம்பால் எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாகவும், இந்த முறை தயாநிதி மாறனுக்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடந்தது போல் டெபாசிட் பறிபோனாலும் ஆச்சரியமில்லை என்றும் களப்பணியாற்றும் அதிமுக கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர்.