சென்னை, அக்.24: தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களுக்கான முன்பதிவை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை ஞாயிற்று கிழமை வருவதால் அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமையும், மறுநாள் திங்கட்கிழமையும் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்வது வழக்கம் என்பதால் 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன. இந்த பேருந்துகள் இன்று முதல் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கே.கே. நகர். எம்டிசி பேருந்து நிலையம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் மற்றும் பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படுகிறது.

பேருந்து புறப்படும் இடங்களில் சிறப்பு கவுண்டர்கள் இன்று திறக்கப்பட்டன. கோயம்பேடு புறநகர் பேருந்துநிலையத்தில் தீபாவளியையொட்டி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முன்பதிவு டிக்கெட் கவுன்டரை போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.