திருச்சி,அக். 24: திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில் சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன் நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி சிவகாமசுந்தரி விசாரணை நடத்தினார். அப்போது சுரேஷ் தரப்பில் ஆஜரான வக்கீல், “ஏற்கனவே லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணை முடிவடைந்த நிலையில், அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது மீண்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக அவரிடம் விசாரித்தால் மிகவும் பாதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.

ஆனால் தனிப்படை போலீசாரோ, சுரேசிடம் 7 நாள் விசாரணை நடத்த அனுமதி வேண்டும் என்று கோரினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து நேற்று காலை மீண்டும் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது சுரேசை தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மனுவை விசாரித்த நீதிபதி சிவகாமசுந்தரி, சுரேசை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து தனிப்படை போலீசார் சுரேசை ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.