சென்னை, அக்.24: ஆவின் தயாரிப்புகளை உலகறிய செய்த ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக, இந்தாண்டும் அவர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமையகத்தில் ஆவின் சாக்லெட் மற்றும் பிஸ்கெட்டுகள் என 2 புதிய தயாரிப்புகளை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஆவின் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பால்வளத்துறை அமைச்சராக நான் பதவியேற்றபோது, ரூ.5,000 கோடியாக இருந்த ஆவினின் மொத்த விற்பனை, தற்போது ரூ.5,800 கோடியாக உயர்ந்துள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் ரூ.6, 300 கோடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இல்லாமல், அரபு நாடுகள், சிங்கப்பூர், கத்தார் போன்ற வெளிநாடுகளிலும் ஆவின் பாலகத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டபோது, எங்கள் நாட்டில் எப்போது ஆவின் பாலகம் அமைக்க போகிறீர்கள் என்று அந்நாட்டு மக்கள் என்னிடம் கேட்டனர். ஆந்திராவில் பல பாலகங்கள் இருந்தும். திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு தயாரிக்க ஆவின் நெய்யையே இன்றளவும் பயன்படுத்திவருகின்றனர், ரேணிகுண்டா விமான நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி கொடுத்துள்ளனர்.

ஆவின் பாலக தயாரிப்புகள் தரமாக உள்ளதன் காரணமாகவே தமிழக மக்கள் மட்டுமின்றி, வெளிமாநில மற்றும் வெளிநாடுகளிலும் வசிக்கும் மக்களும் விருப்பம் தெரிவிக்கின்றனர். அந்த அளவிற்கு ஆவினின் தரம் உயர்ந்ததற்கு காரணம், ஆவின் பணியாளர்கள். அவர்களின் கடின உழைப்பு கௌரவிக்கும் விதமாக கடந்த ஆண்டு 20% தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. அதேபோல், இந்த வருடமும் 20% போனஸ் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 5,000-க்கும் அதிகமான ஆவின் பணியாளர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.