மும்பை, அக்.25: மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி, சிவசேனா கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை பலம் கிடைத்திருப்பதால் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. ஆனால் பிஜேபிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் பாதிக்கு பாதி என்ற பார்முலாவை சிவசேனை முன்வைத்துள்ளது. முதல்வர் பதவியையும் சுழற்சி முறையில், ஆளுக்கு 2 அரை ஆண்டு என்ற அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும் திட்டத்தை சிவசேனை முன் வைத்துள்ளது. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பிஜேபி 105 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான சிவசேனே 56 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணிக்கு அறுதி பெரும்பான்மை கிடைத்து விட்டதால் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

2014 தேர்தலை விட பிஜேபிக்கு 17 இடங்களும், சிவசேனேவுக்கு 7 இடங்களும் கூடுதலாக கிடைத்துள்ளன. காங்கிரசுக்கு கடந்த தேர்தலை விட 2 இடங்கள் அதிகரித்து 44 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 13 இடங்கள் அதிகரித்து 54 இடங்களும் கிடைத்துள்ளன. சிவசேனாவின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க முடியாததால் 50-50 என்ற திட்டத்தை சிவசேனா முன்வைத்துள்ளது. இது குறித்து மும்பையில் நேற்று சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இலாகாக்களை பாதிக்கு பாதி என்ற அளவில் பங்கீடு செய்வது மட்டுமின்றி முதலமைச்சர் பதவியையும் சுழற்சி முறையில் பங்கிட்டு கொள்ள முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து சிவசேனையின் தலைவர்களில் ஒருவர் கூறுகையில், பிஜேபி குடுமி எங்கள் கையில் உள்ளது.

நாங்கள் சொல்வதை கேட்கத்தான் வேண்டும் என்றார். இதனிடையே டெல்லியில் நேற்று நடைபெற்ற பிஜேபி தொண்டர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் மீண்டும் பதவியேற்பார் என்றார். அநேகமாக இன்றே பதவியேற்பு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவசேனாவின் 50-50 பார்முலா குறித்து பிஜேபி தரப்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்ய தாக்கரே ஓர்லி தொகுதியில் 67,427 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சுழற்சி முறை ஒப்புக்கொள்ளப்பட்டால் இவரை முதல்வராக்க சிவசேனை திட்டமிட்டுள்ளது.