7 சுயேட்சை ஆதரவுடன் பிஜேபி ஆட்சி அமைக்கிறது

சென்னை

சென்னை, அக்.25: ஹரியானாவில் 7 சுயேட்சைகள் ஆதரவுடன் பிஜேபி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இவர்களில் 5 எம்எல்ஏக்ள் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசி உள்ளனர். ஹரியான சட்டமன்ற தேர்தலில் பிஜேபி ‘மிஷின் 75’ என்ற குறிக்கோளுடன் போட்டியிட்டது. ஆனால் இந்த குறிக்கோளை எட்ட முடியாமல் 90 தொகுதிகளில் 40-ல் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. எதிர்கட்சியான காங்கிரஸ் 31-லும் தேவிலாலின் கொள்ளுபேரன் துஷ்யந்த் சவுத்தாலாவின் ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களிலும் வென்றது. மற்ற இடங்களை சிறிய கட்சியினரும், சுயேட்சைகளும் கைப்பற்றினார்கள்.

ஆட்சி அமைக்க தேவையான 46 இடம் யாருக்கும் கிடைக்காததால் தொங்கு சட்டமன்றம் அமைந்துள்ளது. இந்நிலையில் பிஜேபிக்கு ஆதரவு தர 7 சுயேட்சைகள் முன்வந்துள்ளன. ஹரியானா, லோகித் கட்சி எம்எல்ஏ, சிர்ஷா கோபால் மற்றும் சுயேட்சை எம்எல்ஏ ஆகியோர் உடனடியாக தங்கள் ஆதரவை பிஜேபிக்கு தெரிவித்தனர். இதேபோல் பிஜேபியில் டிக்கெட் கிடைக்காமல் சுயேட்சையில் வெற்றி பெற்றவர் உள்ளிட்ட மேலும் 5 பேர் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். இவர்களில் தேவிலாலின் இளையமகன் ரஞ்ஜித் சிங் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர். அங்கு உள்துறை அமைச்சரும், பிஜேபி தலைவருமான அமித்ஷாவை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

காங்கிரசுக்கு ஜனநாயக ஜனதா கட்சியின் எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பான்மை பலத்தை பெற முடியாது. எனவே சுயேட்சை ஆதரவுடன் மனோகரர்லால் கத்தார் தலைமையில் பிஜேபி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இன்று கவர்னரை கத்தார் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.