செங்குன்றம், அக்.25: சிறைக்காவலர்களுக்கு சிலம்பாட்ட பயிற்சி அளிக்கப்படும் என்று சிறைத்துறை டிஐஜி முருகேசன் கூறினார். 400 பேர் கலந்துகொண்ட சிலம்பாட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசியபோது இதனை தெரிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு சிலம்பாட்ட கழகத்தில் இணைந்து செயல்பட்டு வரும் திருவள்ளூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் சப்-ஜூனியர் பிரிவு மாநில தேர்வு போட்டி ரெட் ஹில்ஸ் எம்.ஏ. நகர் எலைட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி திடலில் நடந்தது.

மாவட்ட தலைவர் கமாண்டோ ஏ.பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆர். முருககனி வரவேற்றார். அம்பத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் வி.கருணாகரன், ரெட்ஹில்ஸ் காவல் ஆய்வாளர் டி.வசந்தன் போட்டியை தொடங்கி வைத்தனர். மூத்த ஆசான் மாங்காடு பாபா இறுதி போட்டியை தொடங்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழை சென்னை சரக சிறைத்துறை டிஐஜி ஆ.முருகேசன் வழங்கி பேசியதாவது:- தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம்.

ஆணுக்கு பெண் சரிசமமாக இந்த திருவள்ளூர் மாவட்டத்தில் பங்கேற்றிருப்பது பெருமையாக உள்ளது. இக்கலையை நல்லதற்கு பயன்படுத்த வேண்டும். யாரையும் தாக்க பயன்படுத் தாமல் தற்காப்புக்கு பயன்படுத்த வேண்டும். இம்மாவட்ட செயலாளர் ஒப்புதலுடன் சிறைக்காவலர்களுக்கும் விரைவில் சிலம்பாட்ட பயிற்சியளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார். போட்டியை புதுக்கோட்டை, சென்னை நடுவர்கள் நடத்தி தந்தனர். மாவட்ட, கிளை நிர்வாகிகள் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். மாவட்ட பொருளாளர் எம்.ராஜா நன்றி கூறினார்.