ஆவடி மாநகராட்சியில் 42 மருத்துவ குழுக்கள்

சென்னை

அம்பத்தூர், அக்.25: ஆவடி மாநகராட்சியில் தொற்று நோய் தடுப்பு பணிக்காக அமைக்கப்பட்டுள்ள 42 மருத்துவ குழுக்களை அமைச்சர்கள் விஜய பாஸ்கர், பென்ஜமின் துவக்கி வைத்தனர். ஆவடி மாநகராட்சி கூட்டரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு தொற்று நோய்கள் பரவுவது பற்றியும் அதனைக் கட்டுப்படுத்துதல் பற்றிய ஆய்வுக்கூடம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடை பெற்றது.

இந்த ஆய்வு கூட்டத்திற்கு ஆவடி மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.அலெக்சாண்டர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பி.பலராமன், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் கலந்து கொண்டு ஆவடியில் உள்ள இமாக்குலேட் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 42 மருத்துவக் குழுக்களையும் மற்றும் 10 புகைத் தெளிப்பான் வாகனங்களையும் தொற்று நோய் தடுப்பு பணிக்கான ஈடுபடுவதற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

மேலும் தனிநபர் தோல் பட்டையில் ஒலிப்பெருக்கி பொருத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் சுமார் 50 நபர்களை நோய் பாதிக்கப்பட்ட பகுதியில் விழிப்புணர்வு மேற்கொள்ளும் பணியினை தொடங்கி வைத்தனர். இதில் முன்னாள் அமைச்சர் அப்துல்ரஷிம், நகர செயலாளர் தீனதயாளன், பொது சுகாதாரம் நோய் தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் குழந்தைசாமி, ஆவடி மாநகராட்சி சுகாதார அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் அப்துல்ஜாபர் ,வில்லிவாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.ஸ்டாலின் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.