மணப்பாறை, அக்.26: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணி 18 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் சிறப்பு வல்லுனர்கள் அங்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தை சுவாசிப்பதற்கு வசதியாக குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருகிறது.

மணப்பாறை அருகே உள்ள நடுகாட்டுபட்டியை சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியராஜ் – கலாராணி தம்பதியரின் மகன் சுஜித் வில்சன் (வயது 2). இவன் நேற்று மாலை 5.30 மணியளவில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, சுமார் 600 அடி ஆழம் கொண்ட கைவிடப்பட்ட ஆழ்துளை கிணற்றினுள் தவறி விழுந்துவிட்டான்.

இதுகுறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு பணியினர் குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், சரோஜா ஆகியோர் மீட்பு பணிகளை துரிதபடுத்தி ஆலோசனை வழங்கி வந்தனர்.

28 அடி ஆழத்தில் சிக்கி இருந்த குழந்தையின் கைகளில் கயிறு கட்டு வெளியே தூக்க முயற்சி மேற்கொண்டபோது, குழந்தை தவறி விழுந்து 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். குழந்தைக்கு தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.

ஆழ்துறை கிணற்றிற்குள் மண் விழுந்துள்ளதால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், மண் விழுந்துள்ளதால் குழந்தையின் நிலை குறித்து அறிய இயலவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 18 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணி நீடித்து வருகிறது.

அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் விடிய விடிய அங்கு முகாமிட்டு மீட்புப்பணியை பார்வையிட்டு வந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி மூலம் விவரங்களை கேட்டறிந்து வருகிறார். இதனிடையே 40 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்டார்கள். எப்படியும் குழந்தையை உயிருடன் மீட்டு விடுவோம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.