‘கரும்பு விவசாயிகளுக்கு உடனடி கடன் தருக’ நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் கடிதம்

TOP-2 தமிழ்நாடு முக்கிய செய்தி

சென்னை, அக்.26: தமிழகத்தில் 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், கரும்பு சாகுபடிக்கான கடனை உடனே வழங்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமனுக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு: சர்க்கரை ஆலைகள் விவகாரம் தொடர்பாக தங்களது முயற்சியால் சென்னையில் செப்டம்பர் 10-ம் தேதி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து, மத்திய அரசு மற்றும் தமிழக அரசும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்ட கூட்டம் செப்டம்பர் 24-ல் நடைபெற்றது. இதில் கரும்பு உற்பத்தியாளர்களும் பங்கேற்று தங்களது பிரச்சனைகளை தெரிவித்துள்ளனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், சர்க்கரை ஆலைகளில் கடன் சீரமைப்பு தொடர்பாக, செப்டம்பர் 30-ம் தேதி சிறப்பு பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில், சர்க்கரை ஆலை மறுசீரமைப்பு கமிட்டி அமைக்க முடிவெடுக்கப்பட்டது.

சர்க்கரை ஆலைகளின் நிதி நிலைமையை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கரும்பு உற்பத்திக்காக மெட்ரிக் டன்னுக்கு, ரூ.200 ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

ரூ.1,44,882 கரும்பு விவசாயிகளுக்கு, 2017-18-ம் ஆண்டில் அரவை பருவத்திற்காக ரூ.134.53 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2018-19-ம் ஆண்டின் மாற்று உற்பத்தி ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.137.50 வழங்கப்பட்டது.

சொட்டு நீர்பாசனத்தை மேம்படுத்த நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை அடிப்படையில், தமிழ்நாடு சர்க்கரை உற்பத்தி தொழிலை மேம்படுத்த மேலும் நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களது கடனை சீரமைத்து உடனடியாக சலுகைகள் வழங்க வேண்டும். இந்த விஷயத்தில் திவால் மற்றும் சர்ஃபாசி சட்ட விதிகளை கடுமையாக பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்த வேண்டும்.

சர்க்கரை ஆலைகளை மேம்படுத்தும் வகையில் கூடுதலாக சர்க்கரை உற்பத்திக்கான அனுமதி வழங்கப்பட வேண்டும். கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் முந்தைய கால கடனை திருப்பி செலுத்தவிட்டாலும், சாகுபடிக்கான கடனை உடனே வழங்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

எஃப்.ஆர்.பி. எனப்படும் தொகைகள் வழங்கப்படாததால்தான், விவசாயிகளால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. சுமார் 4 லட்சம் தமிழக கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சர்க்கரை ஆலைகளை சீரமைக்கவும் உடனடியாக சாதகமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.