இனிப்பு பெட்டிகளில் கட்டுக்கட்டாக பணம்

சென்னை

சென்னை, அக்.26: பரங்கிமலையில் உள்ள சிட்லப்பாக்கம் பிடிஓ அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புதுறை அதிரடி சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ரூ.22,55,000 மற்றும் 12 சவரன் நகை கைப்பற்றப்பட்டது. இந்த பணத்தை இனிப்பு பெட்டிகளில் கட்டுக்கட்டாக பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். சென்னை தாம்பரம் அருகே சிட்லப்பாக்கத்தில் அமைந்துள்ள தோமையார்மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 25 க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களிலும் சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் இனிப்புப் பெட்டிகளில் 2 ஆயிரம், 500 ரூபாய்கள் ஏராளமாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தத்தில் இந்த அலுவலகத்தில் மட்டும் 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணமாகவும், 12 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் கலால் உதவி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது. தீபாவளி சமயம் என்பதால் மதுபான கூடங்கள், லாட்ஜ் உள்ளிட்டவற்றில் இருந்து தீபாவளி அன்பளிப்பாக பணமோ, பரிசுப்பொருளோ லஞ்சமாக வழங்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த அதிரடி சோதனையில் கணக்கில் வராத சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 280 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து கலால் உதவி ஆணையர் ஜெயராணியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.