வாஷிங்டன், அக்.28: உலகையே அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

துவக்கத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் சிரியா மற்றும் ஈராக் நாடுகளின் சில பகுதிகளை தாக்குதல்களை நடத்தி கைப்பற்றினர். பின்னர் உலகம் முழுவதும் தாக்குதல்களை விரிவாக்கினர். சர்வதேச அளவில் மிக மோசமான பயங்கரவாத அமைப்பாக ஐ.எஸ் அமைப்பு உருவெடுத்தது. இதன் தலைவர் பாக்தாதி முக்கியமான தேடப்படும் நபராக உருவானார்.

அவ்வப்போது அல் பாக்தாதி பேசியதாக சில ஆடியோக்களை ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டு வந்ததன் மூலம் அவர் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில் இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது ஐ.எஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல் குறித்து ஏப்ரல் மாதம் அல் பாக்தாதி பேசும் 18 நிமிடம் ஓடும் வீடியோ வெளியானது.

இந்நிலையில், அமெரிக்க படைகளின் தாக்குதலில் அல் பாக்தாதி கொல்லப்பட்டதை ‘ஏதோ மிகப்பெரிய விஷயம் நடந்துள்ளது’ என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் இருந்து தனது குடும்பத்தினருடன் துருக்கி நாட்டின் எல்லைக்கு தப்பியோட முயன்ற போது பாக்தாதியின் இருப்பிடம் அமெரிக்கப்ப டைக்கு தெரிய வந்தது. அவர்கள் நடத்திய தாக்குதலில் அல் பாக்தாதி மற்றும் அவரது 3 மகன்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், ‘வடமேற்கு சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை இரவு அமெரிக்க படையின் தாக்குதலில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில் அல் பாக்தாதியும் ஒருவர். சுரங்கப்பாதை ஒன்றில் வெளிவர முடியாத நிலையில் கதறியபடி ஓடி, அழுது கொண்டே அவர் உயிரிழந்தார். தான் அணிந்திருந்த வெடிகுண்டு ஆடையை வெடிக்க செய்து பாக்தாதியும் அவரது மூன்று மகன்களும் உயிரிழந்தனர். ஒரு கோழை போல அவர் இறந்தார். இனி உலகம் பாதுகாப்பானதாக இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.