திருவாரூர், அக்.29: ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்பார்கள். அத்தகைய குருபகவான் இன்று அதிகாலை விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள குருபகவானுக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசித்தனர்.
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற குருபகவான் பரிகார தலமாக ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் விளங்குகிறது. குருபகவானுக்கு இங்கு தனி சன்னதி இருப்பதால், குரு பகவான் ஆலயங்களில் தனித்த ஆலயமாக இது விளங்குகிறது.

இன்று அதிகாலை 3.49 மணியளவில் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு குருபகவான் பிரவேசம் செய்தார். இதனை முன்னிட்டு இக்கோயிலில் குருபெயர்ச்சி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. குருபெயர்ச்சி நடந்த போது குருபகவானுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மகாதீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பரிகார யாகங்கள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசனம் செய்ய வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் அரசு பல்வேறு துறைகளும் சிறப்பு வசதிகளை செய்திருந்தது.
மத்தியமண்டல காவல்துறை தலைவர் வி.வரதராஜ், தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆகியோர் உத்தரவின் பேரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகளை தஞ்சை மண்டல இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.தென்னரசு உதவி ஆணையர் ச.கிருஷ்ணன் மற்றும் கோயில் செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் பாஸ்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
குருபெயர்ச்சிக்குப் பின் அக்டோபர் 31-ம்தேதி தொடங்கி நவம்பர் 7-ம்தேதி முடியவும் இரண்டாவது கட்டமாக லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது.

ரிஷபம், கடகம், கன்னி ,துலாம், தனுசு, மகரம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் லட்சார்ச்சனையில் பங்கேற்று பரிகாரம் செய்துகொண்டனர்.
இதேபோல் சென்னையில் உள்ள குருபரிகார தலஙகளான பாடி ஜெகதாம்பிகை உடனுறை திருவல்லீஸ்வரர் (திருவல்லிதாயம்) ஆலயம் மற்றும் போரூர் சிவகாமசுந்தரி உடனுறை இராமநாதீஸ்வரர் ஆலயத்திலும் குருபெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.