சென்னை, அக்.30: தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்பட்ட ரூ.550.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார். இதே விழாவில் ரூ.112.62 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் 804 பேருக்கு பணி நியமன ஆணைகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.150 கோடிக்கு கடன் உதவிகளையும் வழங்குகிறார்.

சென்னை கலைவாணர் அரங்கில் நாளை 31-ம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு அரசுத் திட்ட பணிகள் திறப்பு மற்றும் துவக்க விழா நடைபெறுகிறது.

விழாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகிக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டப்பணிகளை துவக்கிவைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்கள் வழங்கியும் பேருரை ஆற்றுகிறார்.

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.550.50 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிதாக ரூ.112.62 கோடி மதிப்புக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன.

நாளை நடைபெறும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இவற்றை துவக்கி வைக்கிறார். மேலும் தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கீழ் 525 நபர்களுக்கு பணி நியமன ஆணை, ஊரக வளர்ச்சித்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தில் 279 நபர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட உள்ளது.
இதற்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் நாளை நடைபெறும் விழாவில் வழங்குகிறார்.
இது தவிர பல்வேறு மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கிக்கடன் உதவிகளையும் வழங்குகிறார்.
இந்த விழாவில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மீன்வளம் மற்றும் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள், எம்,பி.க்கள், எம்எல்ஏக்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

தலைமைச்செயலாளர் கே.சண்முகம், நகராட்சி நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.