தாகா, அக்.30:  தனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரரான கங்குலி, கேட்டுக்கொண்டதன்பேரில் இந்தியா-வங்கதேசம் இடையிலான டெஸ்ட் போட்டியை காண, தான் நேரில் வருவதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் தொடர் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் நவம்பர் மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்தப் போட்டியை நேரில் காண வரவுள்ளதாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தாகாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் ஷேக் ஹசினா பங்கேற்று கூறுகையில், கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண வருமாறு சவுரவ் கங்குலி அழைப்பு விடுத்தார். எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரரான கங்குலி இந்தக் கோரிக்கையை வைத்தவுடன் நான் அதனை ஏற்றுக் கொண்டேன். நான் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் போட்டியை நேரில் சென்று பார்க்க உள்ளேன். இதற்கும் அரசியலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா டெஸ்ட் போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாக ஏற்கெனவே தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.