சென்னை, அக்.30: பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்தேக்கங்களில் இருந்து விவசாயத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தாமிரபரணி ஆற்றில் பிசான பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றின் கீழ் வடக்கு கோடைமேலழகியான் கால்வாய், தெற்கு கோடைமேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் மற்றும் திருநெல்வேலி கால்வாய் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருதூர் மேலக்கால் கால்வாய், மருதூர் கீழக்கால் கால்வாய், தெற்கு பிரதானக் கால்வாய் மற்றும் வடக்கு பிரதானக் கால்வாய் ஆகிய கால்வாய்களின் கீழுள்ள நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளுக்கு பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து 30.10.2019 முதல் 31.03.2020 வரை 154 நாட்களுக்கு 13725.92 மில்லியன் கன அடி தண்ணீரை திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தாமிரபரணி பாசனத்தின்கீழ் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 7 கால்வாய்கள் மூலம் 40,000 ஏக்கர் பாசன நிலங்கள் மற்றும் துலீத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 அணைக்கட்டுகளின் கீழுள்ள 4 கால்வாய்கள் மூலம் 46,107 ஏக்கர் பாசன நிலங்கள் ஆக மொத்தம் 86,107 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுக பாசனப்பரப்பு பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெறவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.