விழுப்புரம், அக்.30: விழுப்புரத்தில் வங்கிகள் சார்பில் நடக்கும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாமில் 1,120 பயனாளிகளுக்கு ரூ.38.52 கோடி கடன் உதவியை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.
விழுப்புரம் ஆனந்தா திருமண மண்டபத்தில் பொதுத்துறை வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் தொடங்கியது. இதனை மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 324 வங்கி கிளைகள் செயல்படுகின்றன. இந்த மாவட்டத்தை சார்ந்த அனைத்து வங்கிகளும் இம்மாவட்டத்தில் விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள், தொழில் முனைவோர்கள் என எல்லோருக்கும் கடன் உதவி வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் சுய உதவிக்குழுக்களுக்கு சுமார் ரூ.550 கோடி அளவிற்கு கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை கிட்டத்தட்ட ரூ.210 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வங்கிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. முகாமில் 1,120 பயனாளிகளுக்கு வீட்டுக்கடன், வாகனக்கடன் என மொத்தம் 38 கோடியே 52 லட்சம் ரூபாய் கடனாக கலெக்டர் சுப்பிரமணியன் பயனாளிகளிடம் வழங்கினார்.