சென்னை, அக்.30:  குமரிக்கடலில் புயல் சின்னம் உருவாகி வருவதை தொடர்ந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள தமிழக மீனவர்களுக்கு கடலோர காவல்படை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு திரும்பி வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும், அனைத்து மாவட்ட கலெக்டரும் தயார் நிலையில் இருப்பதாகவும் வருவாய் துறை நிர்வாகத்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் அவர் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி முனை, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது மாலத்தீவு, குமரி முனை பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, மாலத்தீவின் கிழக்கு வடகிழக்கில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும், லட்சத்தீவின் கிழக்கு தென்கிழக்கில் 390 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னையிலுள்ள மண்டல வானிலை ஆய்வுமையத்துடன் நேரடி தொடர்பிலிருந்து நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக, அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பொழிவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும், குமரி முனை, மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இது மணிக்கு 60 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும் என்றும் இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கேரள கடற்கரைப் பகுதிகளில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில், பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இது மணிக்கு 55 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31.10.2019 அன்று, இலட்சத்தீவு, கேரள மற்றும் கர்நாடக கடற்கரை பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில், மிக பலத்த காற்று வீசக்கூடும் என்றும், இது மணிக்கு 70 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற படகுகளில், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சென்ற 7 படகுகள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சென்ற 5 படகுகளை தவிர அனைத்து படகுகளும் கரைக்கு திரும்பியுள்ளன.

மேற்சொன்ன 12 படகுகளில், 4 படகுகளில் உள்ள மீனவர்களுக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு அவர்கள் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும் அனைத்து மாவட்ட கலெக்டர்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.