திருச்சி, அக்.30:  கடந்த 5 நாட்களாக என் மகனை மீட்க இரவு -பகல் பாராமல் பாடுபட்டு அனைத்து உதவிகளையும் செய்த தமிழக அரசுக்கும், உலகமே சுஜித்தை அவங்க பிள்ளையாக நினைத்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் சுஜித்தின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது.  இதுகுறித்து தாய் கலாமேரி பேசும்போது, என் குழந்தைக்காக பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை அனைவரும் பிரார்த்தனை செய்தீர்கள். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மீட்புப் பணிகளைச் சிறப்பாகவே செய்தனர். இடையில் பாறை இருந்ததால் அவர்களால் குழந்தையை மீட்க முடியவில்லை. முன்னாடி காலத்தில் போர் போட்டிருந்தா வர இப்ப உள்ள சந்ததி யினருக்கு சொல்லுங்க.அவுங்க கிட்ட சொல்லாம இருக்காதீங்க,
குழி எந்த காலத்தில் போட்டிருந்தாலும் சரி, அதை வரும் சந்ததியினருக்கு சொல்லுங்க, இல்லனா நீங்களே முடிந்த மட்டும் இந்த குழியை அடைச்சிடுங்க, ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் இனி தொடரக் கூடாது.

எனது மகனின் இறப்பே இறுதியாக இருக்க வேண்டும்.  என் குழந்தையை மீட்க கடந்த 5 நாட்களாக இரவு பகல்பாராமல் பாடுபட்ட தமிழக அரசுக்கும், உயிரை பணையம்வைத்து போராடி மீட்ட மீட்புக்குழுவினருக்கும், அவங்க வீட்டு பிள்ளையாக நினைத்து பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியதாஸ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

குழந்தை 25ஆம் தேதி மாலை கிணற்றுக்குள் விழுந்துவிட்டான். உடனேயே நாங்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அனைத்து துறைகளில் இருந்தும் அதிகாரிகள் வந்துசேர்ந்தனர். 4 நாட்கள் தங்கி அவர்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்தனர். இதற்காக தமிழக முதல்வருக்கும், துணை முதல்வருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் குழந்தைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.