சென்னை, அக்.30:  இறந்த பிறகு சடலத்தை மீட்கும் விதிகளுக்கு உட்பட்டே சுஜித் உடல் மீட்கப்பட்டது. மேலும் மீட்கப்பட்ட சடலத்தை காட்சியப்படுத்துவது சரியாக இருக்காது என்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

குழந்தையை மீட்க 600க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் போராடினர். களப்பணியாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை சந்தேகிப்பது சரியான எண்ணம் இல்லை. கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது களப்பணியாளர்களை கவலை அடையச் செய்யும். சுஜித் மீட்பு பணியின் சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்படும் – எதிர்காலத்தில் இது போல் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் சடலத்தை காட்சிப்படுத்தியதால் உலக அளவில் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது.

உயிரிழந்த சிறுவனின் உடலை காட்சிப்படுத்துவது விதிமுறைகளுக்கு எதிரானது. விபத்து, போர், பேரிடரில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் விதிகள் பின்பற்றப்பட்டது. விதிமுறைப்படியே குழந்தை சுஜித் உடல் மீட்கப்பட்டது விளக்கம் அளித்துள்ளார். துர்நாற்றம் வீசியதால் தான் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுஜித்தின் உடல் எடுக்கப்பட்டது. ஆழ்துளை கிணறு சம்பவங்களில் இறந்தவர்களின் உடலை எப்படி எடுக்க வேண்டும் என வழிமுறைகள் உள்ளன.

மீட்பு பணி என்பது வேறு, உயிரிழந்த சடலத்தை மீட்பது என்பது வேறு . உயிருடன் இருக்கும் போது நடைபெறும் மீட்பு பணி, சடலத்தை மீட்கும் போது வேறுபடும். சுஜித்தை மீட்க ஒரு மனிதனால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ? அதை எல்லாம் செய்துவிட்டோம். அதே போன்று சமூக வலைதளங்களில் சுஜித் விவகாரம் தொடர்பான தவறான தகவல்கள் பரப்பபடுகின்றன. இதை மக்கள் ஏற்று கொள்ளக்கூடாது. அதே போன்று மீட்பு பணிக்கு 11 கோடிரூபாய் செலவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் வெளி வந்து கொண்டு இருக்கிறது.

அப்படி எந்த தகவலையும் நான் தெரிவிக்கவில்லை, மேலும் அங்கு பணிபுரிந்தவர்கள் யாரும் பில் கொடுத்து பணம் வேண்டுமென்று கேட்கவில்லை. சுஜித் விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு நொடியும் அவர்களது பெற்றேர்களுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்பட்டு, தூர்நாற்றம் வீசிய நிலையில் தான் உடலை விதிமுறைகளுக்கு உட்பட்டு மீட்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.