சென்னை, அக்.31: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக பிரித்த மத்திய அரசு சட்டத்தை ரத்து செய்யக்கோரி, தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 370- ஐ ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து, நாடாளுமன்றத்தில் ஜம்மு- காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு சட்டத்தை நிறைவேற்றியது.

இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், காஷ்மீரைப் போல பிற மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களாக பிரித்து, சுருக்கும் அபாயம் இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பொருத்தமட்டில் அம்மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல், யூனியன் பிரேசமாக மாற்றியுள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவானது சட்டத்திற்கு புறம்பானது. அவ்வாறு பிரிக்க மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசின் நடவடிக்கை கூட்டாச்சி கொள்கைக்கு விரோதமாக உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும். அதை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம். சத்யநாராயணன், என். சேஷசாயி ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்த வழக்கறிஞர்கள் வாதத்தின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அந்த வழக்கில், நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில் ஜம்மு- காஷ்மீர் மாநில பிரிப்பு தொடர்பான மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதில், வழக்கு தொடர்ந்தவர் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர் அல்ல. இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை. உச்ச நீதிமன்றத்தில் இதுசம்பந்தமான வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.