திருச்சி, நவ. 1: திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூரில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு வங்கியின் லாக்கரில் இருந்த ரூ. 1.50கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் உள்ள பெல் நிறுவன தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தனித்தனியாக குடியிருப்புகளும் உள்ளன.

இந்த பகுதி திருவெறும்பூர் போலீசாரின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருந்தாலும் பெல் தொழிற்சாலைக்கென தனியாக போலீசார் மற்றும் பாதுகாவலர்கள் இருக்கிறார்கள். நேற்று மாலை பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வங்கியை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் திறந்து கிடந்தன. இது குறித்து வங்கி ஊழியர்கள் உடனடியாக திருச்சி மாவட்ட எஸ்.பி. ஜியாவுல் ஹக்கிற்கு தகவல் தெரிவித்தனர். உடனே எஸ்.பி. தலைமையிலான போலீசார் வங்கிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்கள் அங்கு பதிந்திருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வங்கியில் இருந்து மோப்பம் பிடித்தவாறு சென்று சிறிது தூரத்தில் நின்றுவிட்டது. போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் வங்கியில் இருந்த ரூ1.50கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். வங்கி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றிய போலீசார் அதனை ஆய்வு செய்து வருகிறார்கள்.