சென்னை, நவ.1: கடந்த எட்டு நாட்களாக அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வந்த போராட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோளை ஏற்று தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். மருத்துவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 23 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், 32 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 178 வட்ட மருத்துவமனைகள், 1,765 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 134 நகர சுகாதார நிலையங்கள், 8,706 துணை சுகாதார நிலையங்கள், 416 நடமாடும் மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் 18,070 டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த டாக்டர்கள் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணை 354ல் கூறியுள்ளபடி, ஊதிய உயர்வை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். சில டாக்டர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் சில இடங்களில் உரிய சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் இறந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. பணிக்கு திரும்பாதவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

மேலும் இன்று காலைக்குள் பணிக்கு திரும்பாதவர்களின் பணியிடங்கள் காலியிடங்களாக அறிவிக்கப்படும். புதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசு டாக்டர்கள் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்களை நியமிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனை சென்னையில் அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நரசிம்மன் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 8 நாளாக நடந்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் விஜயபாஸ்கரின் வேண்டுகோளை ஏற்று வேலைநிறுத்தத்தை தற்காலிக வாபஸ் பெற்றுள்ளோம். வேலைநிறுத்தம் 8 நாளாக நீடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எங்களை கடவுளுக்கு இணையாக மக்கள் பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப்பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் நன்றி
அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுள்ளதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று இன்று (1.11.2019) காலை வரை பணிக்கு திரும்பிய அரசு மருத்துவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சரின் ஆணைப்படி அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பணிமுறிவு உத்தரவு திரும்பப் பெறப்படுகிறது. முதலமைச்சர் உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.