சென்னை, நவ.1: அரபிக்கடலில் உருவான மஹா புயல் குஜராத் நோக்கி சென்றுவிட்டதால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியிருக்கிறார். இருப்பினும் தமிழகத்தில் அடுத்த 3 நாட் களுக்கு லேசான மழை பெய்யும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்தமான் கடல் பகுதியில் உருவாகி யுள்ள மேலடுக்கு சுழற்சி காற்று தாழ்வு மண்டலமாக மாறும் என்ற போதிலும், அதுவும் வடமேற்கு நோக்கி நகரும் என்பதால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் தான் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் என்பதால் அடுத்து உருவாகும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மாதத்தில் மேலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரியில் 6 செ.மீட்டரும், பிற மாவட்டங்களில் 1 முதல் 5 செ.மீ. வரையும் மழை பதிவாகி உள்ளது.