சென்னை, நவ.1: பதவியேற்றது முதல் இதுவரை ரூ.33,509 கோடி மதிப்பில் 47,522 மக்கள் நல பணிகளை தொடங்கி வைத்து இருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர்எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆற்றிய உரையில் கூறியது வருமாறு:- தமிழ்நாட்டில் தற்போது 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகள் உள்ளன. தேசிய அளவில் 31 சதவிகித மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரையில் 48.45 சதவிகிதம் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களைக் கொண்டு, நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.

கிராமங்களே நாட்டின் முதுகெலும்பு என்றார் மகாத்மா காந்தியடிகள். தமிழ்நாட்டில் உள்ள 31 ஊரக மாவட்டங்களில் 79 ஆயிரத்து 394 குக்கிராமங்கள் உள்ளடக்கிய 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது, சமுதாயத்திற்கு தேவையான சேவைகளை அளிப்பது, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் தனிநபர் குடும்பங்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவது, நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குதல், நகரங்களுக்கு இணையான கட்டமைப்புகளை கிராமங்களிலும் உருவாக்குதல் போன்ற எண்ணற்ற ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை மூலம் செயல்படுத்தி வருகிறது.

ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்“” என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். கிராமப் பகுதிகளில் வறுமை ஒழிப்பு செயல்பாட்டையும் தாண்டி, தொழில் மேம்பாடு, நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதல் போன்றவற்றின் மூலம் ஊரக சமுதாயத்தின் வளம் மற்றும் நிலைத்த உயர்வினை உருவாக்கி பெரும் மாற்றம் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உலக வங்கியின் நிதி உதவியுடன் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் என்ற ஒரு தனித்துவம் வாய்ந்த திட்டம் 918 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 1930-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காலத்திலிருந்து, சரித்திரத்தில், ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட 17,600 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி சரித்திரம் படைத்த அரசு அம்மாவின் அரசு.

அம்மாவின் அரசு பதவியேற்றது முதல் இன்று வரை 33 ஆயிரத்து 509 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 47 ஆயிரத்து 552 பணிகள் என்னால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவிக்க விரும்கிறேன். மேலும், 22 ஆயிரத்து 687 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 906 பணிகளுக்கு என்னால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.150 கோடி கடன், 525 பேருக்கு பணி நியமன ஆணை, ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் 525 பேருக்கும், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் 279 பேருக்கும், கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். துணை முதலமைச்சர் ஓபிஎஸ், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.