சென்னை, நவ.2: கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப் பட்ட தொன்மைமிக்க பழங்கால பொருட்கள் திருப்புவனம் அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் அமைக் கப்படும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு தினம் அரசு விழாவாக நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நம் வரலாற்றின் தொன்மையை இதுவரை இலக்கிய சான்றுகள் கொண்டு நாம் விளக்கியதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையிலும், பழனி அருகே உள்ள பொருந்தலிலும் நடுக்கற்கள் மற்றும் மண்பாண்ட சான்றுகள் நமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. தற்போது, சிவகங்கை மாவட்டம், கீழடி ஆய்வுகள் வைகை நதிக்கரை நாகரீகத்தை உலகுக்கு பறைசாற்றுகின்றன. இதன் மூலம் தமிழரின் தமிழி என்ற தமிழ் பிராமி எழுத்துகள், அசோகர் காலத்து பிராமி எழுத்துகளுக்கும் காலத்தால் முந்தியவை என்பதை உறுதி செய்கின்றன. இந்திய துணை கண்டத்தில் முதல் எழுத்தறிவு பெற்ற சமூகம் தமிழ் சமூகம் தான் என்பது நிரூபணமாகி இருக்கிறது.

தமிழ்நாடு தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது, தமிழ் நாட்டின் பெருமை பற்றியும், நமது மொழியின் தொன்மை பற்றியும், அனைவரும் நினைவுகூறும் வகையில் அமையும் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
இந்த இனிய நாளில், கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகா கொந்தகை கிராமத்தில் ஒரு புதிய உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ரூ.12.21 கோடி செலவில் அமைக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.