வேலூர், நவ. 2: கோதாவரி – கிருஷ்ணா நதிகளை பாலாறுடன் இணைக்கவேண்டும் என்றும் விவசாயத்தை லாபம் தொழிலாக மாற்ற வேண்டும் என்றும் விஐடியில் நடைபெற்ற உழவர் களஞ்சியம் துவக்க விழாவில் வி ஐ டி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியுள்ளார். விஐடி வேளாண்மைத் துறை சார்பில் உழவர் களஞ்சியம் – வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் வேந்தர் டாக்டர்.ஜி.விசுவநாதன் தலைமையில்நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான துரைமுருகன் முன்னிலையில் அமைச்சர் கே.சி.வீரமணி துவக்கி வைத்தார்.

அப்போது ஜி.விசுவநாதன் பேசியதாவது:- தமிழகத்தில் 1.5 கோடி ஏக்கர் சாகுபடி நிலம் இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் சாகுபடி நிலங்களை நாம் இழந்து விட்டோம். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வம் விவசாயிகளுக்கு நாளடைவில் குறைந்து கொண்டே வருகிறது, சமீபத்திய கணக்கின் படி 8 லட்சம் பேர் விவசாய தொழிலை விட்டு மாற்று வேலைக்கு சென்றுள்ளனர். காரணம் விவசாயம் லாபகரமான தொழில் இல்லை என்ற காரணம் தான். இந்த நிலை மாறி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்.
நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை பயன்படுத்தி ஏரி, ஆற்று கால்வாய்களை நாம் சரி செய்ய வேண்டும், இதனால் பாசன வசதி விவசாயிகளுக்கு கிடைக்கும். மழை நீரை சேமிக்க வேண்டும். வேலூரில் 1200 ஏரிகள் உள்ளன, தமிழகத்தில் 41000 ஏரிகள் உள்ளன.

இவற்றை ஒழுங்காக பராமரித்து நாம் நீரை சேமிக்க வேண்டும். கோதாவரியில் மட்டும் ஆண்டுக்கு 3000 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது இதை தடுத்தால் தென் இந்தியாவின் 5 மாநிலங்கள் பயன் பெறலாம். இதற்காக மத்திய மாநில அரசுகள் கோதாவரி – கிருஷ்ணா நதி நீர் இணைப்பு திட்டத்தை செயல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதை நாம் தடுக்க வேண்டும் என்றார். அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது.

விவசாயம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தென்பண்னை ஆறு-பாலாறு இணைப்பு நடவடிக்கை வேலை நடைபெற்று வருகிறது. 60 ஆயிரம் கோடி திட்டத்தில் கோதாவரி – காவேரி நதி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதை நடைமுறைபடுத்த , அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் ஏற்பாடு செய்வார் எனக் கூறினார். விவசாயிகளுக்கு உதவ வி ஐ டி வேந்தர் டாக்டர்.கோ.விசுவநாதன் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும் என்றார்.