சென்னை, நவ.4: தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது குழந்தை அபினேஷ் சரவ் பலியானது தொடர்பாக கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். காசி மேட்டில் காற்றாடி வியாபாரம் செய்து வந்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் நேற்று கோபால் என்பவர் தனது மூன்று வயது குழந்தை அபினேஷ் உடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு காற்றாடி விட்டுக்கொண்டிருந்தவர்களின் மாஞ்சா நூல் குழந்தையின் கழுத்தை அறுத்ததில் அபினேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. விதிகளை மீறி பட்டம் விட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கொருக்குப்பேட்டை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (20), லோகேஷ் (வயது 24) மற்றும் 17 வயது சுனில் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் காசிமேடு மணக்குப்பத்தில் காற்றாடி விற்பனை செய்து வந்த சார்லஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். காற்றாடி விட பயன்படுத்தப்படும் கண்ணாடி கூழ் கலவையால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் அறுபட்டு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இதுவரை பலர் பலியாகி உள்ளனர்.

2015-ம் ஆண்டு செப்டம்பரில் பெரம்பூரில் இதே போல் மோட்டார் சைக்கிளில் சென்ற சிறுவன் மாஞ்சா கயிறு இறுக்கி 2 வயது சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவத்திற்கு பிறகு அப்போதைய போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜ் மாஞ்சா கயிறு பயன்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். இருப்பினும் அவ்வப்போது மாஞ்சா கயிறால் உயிரிழக்கும் சம்பவம் நடந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தாம்பரத்தில் இரண்டரை வயது சிறுவன் தந்தையுடன் சென்ற போது மாஞ்சா கயிறு இறுக்கி படுகாயமடைந்தான். கடந்த ஆண்டு டிசம்பரில் கொளத்தூர் வெங்கடேசன் நகரை சேர்ந்த டாக்டர் சரவணன் என்பவர் ஐசிஎப் பேக்டரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது மாஞ்சா நூல் இறுக்கி காயமடைந்தார். தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் எங்கு தயாரிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆன்லைன் மூலமும் இந்த விற்பனை நடைபெற்று வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது.