சென்னை, நவ.4: டெல்லியில் பரவியுள்ள ஆபத்தான காற்று மாசு சென்னைக்கு வர வாய்ப்பு இல்லை என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் காற்றின் மாசு ஆபத்தான கட்டத்தை அடைந்து இருப்பதால் பள்ளிகளுக்கு 8-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது. 32 விமானங்கள் நேற்று டெல்லியில் தரையிறங்காமல் திருப்பி விடப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானாவில் விவசாயிகள் வைக்கோல் உள்ளிட்ட வேளாண் கழிவுகளை திறந்த வெளியில் எரிப்பதால் புகை மூட்டம் காற்றில் பரவி டெல்லியில் காற்றின் தரம் 500 புள்ளிக்கும் அதிகமாக மாசு அடைந்திருப்பதால் பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் காற்றில் மிதக்கும் இந்த மாசு தமிழகத்தில் இடைவெளி விட்டுள்ள வடகிழக்கு பருவமழை காலத்தில் அடுத்தவாரத்தில் தமிழகத்திற்கு பரவலாம் என சில தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியிருந்தனர்.

இதுபற்றி வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதத்தை தொடங்கியிருக்கிறார்கள். தற்போது வடகிழக்கு பருவகாற்று சென்னையில் பலமாக வீசத்தொடங்கி இருப்பதை பயன்படுத்தி இந்த காற்று மாசு சென்னைக்கு வராது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைமை துணை இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், சென்னையில் இருந்து தலைநகர் டெல்லி வெகுதொலைவில் உள்ளது. டெல்லி30 டிகிரி அட்சரேகையில் இருக்கும். அதேபட்சத்தில் 8 முதல் 12 டிகிரி அட்சரேகைக்குள் இருக்கிறது. எனவே டெல்லியின் காற்று சென்னைக்கு பயணிக்க வாய்ப்பில்லை என்றார்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னால் தலைவர் எராஜ் கூறுகையில், சென்னைக்கும் டெல்லிக்கும் இடையே மலைகள் இருக்கின்றன. வடகிழக்கு பருவக்காற்றும் வீசுகிறது. கடல் தன்மையில் எதாவது மாற்றம் ஏற்பட்டால் இன்றி டெல்லியின் காற்று சென்னை நோக்கி தள்ளப்படாது. தென்மேற்கு பருவகாலத்தில் பெங்களூரு மாசுபட்டால்தான் சென்னைக்கு பரவுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றார்.