சென்னை, நவ.4: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதையடுத்து நடிகர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சினிமாத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஐகான் ஆஃப் கோல்டன் ஜூப்ளி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த உடன் போபாலில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இருந்த கமல்ஹாசன் ரஜினிகாந்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துக்ளை தெரிவித்தார்.

அதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- இந்தியத் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்துக்கு, இது மேலும் பெருமைச் சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. முயற்சிக்கு முன்னுதாரணமாகவும், எளிமைக்கு எடுத்துக்காட்டாகவும், தமிழ்த் திரையுலகிற்குத் தூணாகவும், இளைஞர்களுக்கு எழுச்சியாகவும், உயர்வுக்கு ஊன்றுகோலாகவும், வானுயர பெயரோங்கி வாழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் சாதனையாளர் சிறப்பு விருது பெறப் போவது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெருமைக் கொள்கிறது. விருது பெறபோகும் ரஜினிகாந்திற்கு வாழ்த்துக்களையும் , அப்பெருமையை வழங்கிட்ட மத்திய அரசுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.